அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்ற அனுமதி - ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உற்சாகம்


அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்ற அனுமதி - ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உற்சாகம்
x

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் திரண்டு உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.

இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். மேலும் இந்த வழக்கினை ஐகோர்ட்டில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் அவர் முறையீடு செய்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதியின் அனுமதியுடன் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நேற்று நள்ளிரவு விசாரணைக்கு வந்தது. விடிய விடிய நடந்த மேல்முறையீடு வழக்கில் 3 தரப்பில் வாதங்கள் முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை எனவும், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் திரண்டு உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story