அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை


அதிமுக பொதுக்குழு  ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியாக கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றனர். கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்தனர்.

இதையடுத்து இரு தரப்பு ஆதரவாளர்கள் இடையே மோதல் - கலவரம் வெடித்தது. இதையடுத்து அ.தி.மு.க. அலுவலகம் அதிரடியாக பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. மயிலாப்பூர் தாசில்தார் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் கட்சி அலுவலகம் கொண்டு வரப்பட்டது.

இதை எதிர்த்து இரு தரப்பினரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்தது. நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த 'சீல்' கடந்த மாதம் 20-ந்தேதி அகற்றப்பட்டு, அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதே நேரத்தில் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆகஸ்டு 20-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நிர்வாகிகளோ, தொண்டர்களோ செல்லக்கூடாது என்றும், அ.தி.மு.க. அலுவலகத்துக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நிபந்தனை விதித்திருந்தது.

இந்த நிபந்தனையை சுட்டிக்காட்டி பதாகையும் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் செல்வதற்கான தடை நேற்று முன்தினம் இரவுடன் நீங்கியது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது சொந்த ஊர்களில் முகாமிட்டுள்ளனர். இருந்தபோதிலும் மற்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு நேற்று வர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த சூழலில் இரு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதால், ஐகோர்ட்டு தடை நீங்கிய பிறகும் தொண்டர்கள் வருகையின்றி அ.தி.மு.க. அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

ஐகோர்ட்டில் இன்று விசாரணை

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. இதே வழக்கு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ''எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் ஆஜராகி தங்களது வாதங்களை எடுத்து வைக்க இருக்கின்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் விரிவான பதில் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story