மதுப்பழக்கம், கள்ளத்தொடர்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - மதுரையில் சோகம்


மதுப்பழக்கம், கள்ளத்தொடர்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - மதுரையில் சோகம்
x

மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். கரூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி மதுரை பேரையூரை சேர்ந்த வீரசெல்வி (வயது 36). இவர்களுக்கு தனுஸ்ரீ(13), நேகாஸ்ரீ (8) ஆகிய 2 மகள்கள். இருவரும் பள்ளியில் 8-வது மற்றும் 4-வது வகுப்பு படித்து வந்தனர். வீரசெல்விக்கு முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஆசிரியை பணி கிடைத்ததால் அவர் அனுப்பானடி டீச்சர்காலனி பாபுநகர் 4-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்ற செந்தில்குமார் சிலைமான் பகுதியில் வைகை ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரசெல்வியிடம் சிலைமான் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த அவர் கதறி அழுதார். மேலும் இது குறித்து பேரையூரில் உள்ள தனது தம்பி தர்மராஜன், பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது வீரசெல்வி தானும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீரசெல்வியின் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது கதவு பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள அறைகளில் 2 மகள்கள் தனியாகவும், வீரசெல்வி தனியாகவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து பேராசிரியர் மற்றும் அவருடைய மனைவி, மகள்கள் உடல்கள் இருவேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டன.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

செந்தில்குமார் சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அவர் மதுபழக்கத்திற்கு ஆளாகி மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. வீரசெல்வி வைத்திருந்த பணத்தை எடுத்து சென்று மது குடிப்பது, தவறான செயல்களில் ஈடுபடுவது என்று இருந்தாராம். இது தவிர செந்தில்குமார் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனாலும் வீரசெல்விக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

வீரசெல்வி பலமுறை கெஞ்சிப்பார்த்தும் கள்ளத்தொடர்பையும், மதுப்பழக்கத்தையும் செந்தில்குமார் கைவிடவில்லை. எனவே சம்பவத்தன்றும் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார் வீட்டை விட்டு சென்று மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்துதான் குழந்தைகளுடன் சேர்ந்து வீரசெல்வி தற்கொலை செய்து கொண்டார். பேராசிரியரின் தவறான பழக்கங்களே அவருடைய குடும்பத்தினர் தற்கொலைக்கும் காரணமாகிவிட்டது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


Next Story