திருத்தணி அரசு கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரம்பியது: மாணவர்கள், பெற்றோர் திடீர் சாலை மறியல் - அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தை


திருத்தணி அரசு கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரம்பியது: மாணவர்கள், பெற்றோர் திடீர் சாலை மறியல் - அதிகாரிகள், போலீசார் சமரச பேச்சுவார்த்தை
x

திருத்தணி அரசு கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரம்பியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பெற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மேதினிபுரம் பகுதியில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டிற்கான இளநிலை மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் 3 சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், நேற்று கலந்தாய்வுக்கு வந்த மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் அனைத்து பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரம்பி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நடப்பாண்டில் கல்லூரியில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்து மாணவர்கள் படிக்க கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கல்லூரி முதல்வர் பூர்ண சந்திரன், திருத்தணி ஆர்.டி.ஓ., ஹஸ்ரத் பேகம், திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமரவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, மாணவர்கள் தரப்பில், திருத்தணி, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் இந்த ஒரு அரசு கலை கல்லூரி மட்டுமே உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை பள்ளி மாணவர்கள், கல்லூரி படிப்பை தொடர இந்தக் கல்லூரியை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால் இந்தக் கல்லூரியில் போதுமான இடங்கள் இல்லை. கல்லூரி நிர்வாகம் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கல்லூரியில் கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளின் சமரசத்தையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மாணவர்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story