10 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வரிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அ.தி.மு.க. மீதான அச்சத்தால் தி.மு.க. அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. இது ஒரு தோல்வி பயம் தான். எந்தெந்த கட்சிகள் எங்கு செல்லும் என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியவரும். எங்கள் தலைமையில் நல்ல கூட்டணி அமையும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையை ஏற்று கூட்டணிக்கு வர பல கட்சிகள் தயாராக உள்ளனர்.
10 நாட்களில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளது என்பது குறித்து பொதுச்செயலாளர் அறிவிப்பார். கூட்டணிக்காக நாங்கள் யாரிடமும் கெஞ்சவில்லை என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது காங்கிரஸ் கூட்டணி உடைவதாகத் தான் தெரிகிறது.
தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தமிழ் மக்களை வஞ்சிக்கும் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. வரிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் என்பது போல மத்திய அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.