ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை - அன்புமணி ராமதாஸ்


ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை -  அன்புமணி ராமதாஸ்
x

ஸ்டெர்லைட் ஆலையை விட என்.எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை ஏற்படுகிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

5 மாவட்ட பிரச்சினை

சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலூரில் பா.ம.க. சார்பில் மாவட்ட நிர்வாகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிர்வாகத்தை எதிர்த்து வெற்றிகரமாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதை மகிழ்ச்சியுடன் நான் சொல்லவில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை காட்டிலும் 100 மடங்கு பிரச்சினைகள் என்.எல்.சி.யால் கடலூர் மக்களுக்கு ஏற்படுகிறது. எனவே, கடலூர் மாவட்ட மக்களின் பிரச்சினை தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம். இது கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்பட 5 மாவட்டங்களுக்கான பிரச்சினை ஆகும்.

என்.எல்.சி. வருவதற்கு முன்பு அந்த பகுதியில் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர், தற்போது ஆயிரம் அடிக்கு சென்றுவிட்டது. என்.எல்.சி.யின் கைவசம் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிலக்கரி வெட்டி எடுக்க முடியும். பிறகு ஏன் புதிதாக விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு துணை போகிறது.

2025-க்குள் என்.எல்.சி.யை தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சொல்லி உள்ளது. இன்னும் ஓர் ஆண்டில் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்.எல்.சி. நிறுவனத்துக்கு மாநில அரசு எதற்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கிறது.

ஆதரிப்பது ஏன்?

என்.எல்.சி. நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சி கடலில் வெளியேற்றுகிறது. இதனால் 8 கி.மீ. அளவிற்கு கடல் நீர் நிலத்தடியின் உள்ளே புகுந்துள்ளது. காற்று மாசு காரணமாக ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படுகிறது. என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர பணி வழங்கவில்லை. எனவே, நாங்கள் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்க்கிறோம்.

2040-ல் தமிழகத்தை கார்பன் உமிழ்வு இல்லாத மாநிலமாக ஆக்குவோம் என்று கூறும் முதல்-அமைச்சர், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியை எரித்து காற்று, மண், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி மின்சாரத்தை தயாரிக்க காரணமாக இருக்கிறார். விவசாயத்திற்கு என தனி பட்ஜெட்டை அறிவித்துவிட்டு, விவசாயத்துறை அமைச்சரே என்.எல்.சி.க்காக விவசாய நிலங்களை பிடுங்கி வருவது வெட்கக்கேடான செயல். எல்லாவற்றிலும் மத்திய அரசை எதிர்ப்பவர்கள், என்.எல்.சி. விவகாரத்தில் மட்டும் ஆதரிப்பது ஏன்? இவற்றிற்கு எல்லாம் முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

ராணுவமே வந்தாலும் கவலையில்லை

தமிழ்நாட்டின் ஒரு நாள் மின்சார தேவை 18 ஆயிரம் மெகாவாட் முதல் அதிகபட்சம் 22 ஆயிரம் மெகாவாட் ஆகும். இதில் என்.எல்.சி.யால் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது 800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே. என்.எல்.சி. நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் ரூ.2 ஆயிரத்து 400 கோடியை லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் என்.எல்.சி. நிறுவனம் ரூ.55 ஆயிரம் கோடியை குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் முதலீடு செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் எந்த முதலீடும் செய்யவில்லை.

வேளாண்மையை பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். எனவே, ராணுவமே வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, நாங்கள் உறுதியாக தொடர்ந்து போராடுவோம். நாங்கள், எதை கையில் எடுத்தாலும் அதில் வெற்றி பெறும் வரை அதை விட மாட்டோம். அடுத்த கட்டமாக அனைத்து கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களையும சந்தித்து ஆதரவு கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story