வரதட்சணை கொடுமை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவான ஆந்திர வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது


வரதட்சணை கொடுமை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவான ஆந்திர வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது
x
சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு எத்தியோப்பியாவில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த நரஹரி ஷெட்டி (வயது 48) என்பவரின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு விஜயவாடா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவாகி இருப்பது தெரியவந்தது.

கடந்த 14 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்ததால் விஜயவாடா மாநகர போலீசார் நரஹரி ஷெட்டியை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கி உள்ளது.

இதையடுத்து எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த நரஹரி ஷெட்டியை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநில போலீசார் சென்னை வந்து நரஹரி ஷெட்டியை விசாரணைக்காக அழைத்து சென்றதாக விமான நிலைய போலீசார் தெரிவித்தனர்.


Next Story