'காலிப்பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை' - ஐகோர்ட்டு அதிருப்தி


காலிப்பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஐகோர்ட்டு அதிருப்தி
x

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 2010-11ம் ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல் புதிய தற்காலிக ஆசிரியர் தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன?, 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி அதற்கு விடையளிக்கும்படி அண்ணா பலகலைக்கழகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் விதிமுறைகளின்படி, உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என 1,745 ஆசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்க வேண்டும், ஆனால் 981 பணியிடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனுமதிக்கப்பட்ட 981 பணியிடங்களில் 556 பேர் மட்டுமே பணியில் உள்ளதாகவும், 425 இடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்குகள் நிலுவையில் இருந்ததால் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே கோர்ட்டு எழுப்பிய கேள்விகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்கவில்லை எனவும், காலிப்பணியிடங்களை நிரப்ப 2020-ம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், 3 ஆண்டுகள் கடந்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் இவ்வளவு காலிப்பணியிடங்களுடன் இத்தனை ஆண்டுகளாக பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக வரும் 5-ந்தேதிக்குள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தனர்.



Next Story