தாம்பரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு


தாம்பரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என நம்புவதாக தாம்பரத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏழை மக்களுக்கு எத்தனையோ நலத்திட்டங்கள் அ.தி.மு.க. அரசில் கொண்டு வரப்பட்டது. அதில் ஏதாவது தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளதா?. அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதால் செங்கல்பட்டு மாவட்ட அலுவலகத்தை திறக்காமல் தி.மு.க. அரசு வைத்துள்ளது. அ.தி.மு.க. கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியது தி.மு.க. அரசு.

போதை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இதனால் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் தினந்தோறும் நடக்கிறது. எத்தனை வழக்கு போட்டாலும் அதை சந்திக்கும் தெம்பு, திராணி, தைரியம் அ.தி.மு.க. தொண்டனுக்கும், நிர்வாகிக்கும் உண்டு.

தி.மு.க. ஏவல் துறையாக லஞ்ச ஒழிப்பு துறை, காவல் துறை உள்ளது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது, சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எழுதாத பேனாவுக்கு ரூ.83 கோடியில் கடலில் சிலை வைக்கிறார்கள், அதனை அறிவாலயத்தில அல்லது நினைவு இடத்தில் ரூ.3 கோடியில் வையுங்கள். மீதி பணத்தை மாணவர்கள் பயன்படுத்தும் பேனாவுக்கு பயன்படுத்துங்கள். மக்கள் பயனைடைவார்கள்.

இந்த ஆட்சியில் விலைவாசி 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஆட்சியை அகற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். அதற்காக நாம் பாடுபட வேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என்று நம்புகிறோம். அப்போது தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் ஆண்டவனாலும் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா, வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story