கோவை தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு 'எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது' என பதில் அளித்த அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கோவை,
கோவையில் 26-வது ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் பலியானவர்களுக்கு செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் கோவை பா.ஜ.க. சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அந்த கைதிகளை எந்த காரணத்திற்காகவும் விடுவிக்ககூடாது. கோவை இன்னும் அபாயத்தில் இருந்து தப்பிக்கவில்லை' என்றார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்த பெரிய தலைவர்கள் இணைய தயாராக இருக்கிறார்கள். நாங்கள் யாரையும் போன் போட்டு கட்சிக்கு வர அழைப்பதில்லை' என்றார்.
அப்போது, அண்ணாமலையிடம் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். கோவையில் நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம்' என்றார்.