திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி


திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூலித்தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுடர்மணி (வயது 40). இவரது மனைவி செல்வி (38). இந்த தம்பதியினருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் நவீன் குமார் (19) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு பக்கத்து ஊரான வலசைவெட்டி காடு கிராமத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் நவீன்குமார் பெயரும் சேர்க்கப்பட்டது. நவீன்குமார் அந்த தகராறில் ஈடுபடவில்லை என இந்த வழக்கு சம்மந்தமாக சென்னை ஐகோர்ட்டை அணுகி முன் ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில், அந்த பகுதியில் எதாவது அடித்தடி பிரச்சினை நடந்தால் விசாரணைக்காக அழைத்து செல்கிறோம் என்று நவீன் குமாரை அடிக்கடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், விசாரணை என்ற பெயரில் நவீன் குமாரின் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளதாக தெரிகிறது. எனவே நவீன் குமாரின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று மோட்டார் சைக்கிளை கேட்டபொழுது கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த சுடர்மணி-செல்வி குடும்பத்தினர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story