தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விருது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விருது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
x
தினத்தந்தி 2 Dec 2023 9:45 PM GMT (Updated: 2 Dec 2023 9:45 PM GMT)

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 2023-க்கான விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இந்த அங்கீகாரம், தமிழகத்தில் விளையாட்டு சாம்பியன்களை உருவாக்கி வளர்ப்பதற்கு நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சிகளை அங்கீகரித்ததற்காக இந்திய தொழில் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருது டெல்லியில் நடைபெறும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த ஸ்கோர்க்கார்ட் கருத்தரங்கத்தின் 8-வது பதிப்பில் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், விளையாட்டு வீரர்களின் நலன் காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story