சென்னை பெரியமேட்டில் மதுக்கடை திறக்க தடை - ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை பெரியமேட்டில் மதுக்கடை திறக்க தடை - ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

சென்னை பெரியமேட்டில் மதுக்கடை திறக்க தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

சென்னை பெரியமேட்டை சேர்ந்தவர் மனோகர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'பெரிய மேட்டில் உள்ள நேவல் ஆஸ்பத்திரி சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பகுதியில் அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த பகுதியில் மதுக்கடை திறந்தால், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இங்கு மதுக்கடை திறக்க தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணை வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பெரியமேட்டில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடையால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பெரியமேட்டில் மதுக்கடை திறக்க தடை விதித்தனர். பின்னர் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Next Story