தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்து விட்டது: சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு


தினத்தந்தி 19 March 2024 7:46 AM GMT (Updated: 19 March 2024 9:03 AM GMT)

எனக்கு கிடைத்த ஆதரவால் தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்து விட்டது. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று சேலம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

சேலம்,

நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நேற்று கோவை வந்தார். கோவையில் வாகன பேரணியில் பங்கேற்றார்.

இந்த நிலையில், 2-வது நாளாக பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வந்துள்ளார். கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சேலம் விமான நிலையம் வந்த மோடி, கார் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தார்.

விழா மேடை வரை திறந்த வாகனம் மூலம் பிரதமர் மோடி வருகை தந்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டு இருந்த பாஜகவினர் மோடியை பார்த்ததும் உற்சாகம் அடைந்து மோடி..மோடி என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மோடி, பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே வாசன், ஏ.சி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: எனக்கு கிடைத்த ஆதரவால் தி.மு.க.விற்கு தூக்கம் தொலைந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும். கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்து விட்டார்கள். ஆடிட்டர் ரமேஷ் உள்பட பா.ஜ.க நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இந்து மதத்தை விமர்சிக்கும் இந்தியா கூட்டணி மற்ற மதத்தையோ, மற்ற மதத்தினரையோ விமர்சிப்பதில்லை.

உலகின் மிகவும் மூத்த மொழி தமிழ். இந்தியாவுக்கு தமிழ் மொழியால் பெருமை. தமிழ் மொழியின் பெருமையை உலகம் அறிய செய்வேன். இது எனது வாக்குறுதி " இவ்வாறு அவர் பேசினார்.


Next Story