திருச்சியில் இன்று பா.ஜ.க. செயற்குழு கூட்டம்


திருச்சியில் இன்று பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
x

பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சிக்கு வருகை தருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் புதிய விமான முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி, ரூ.19,850 கோடியில் புதிய மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கிவைக்கிறார். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து திருச்சி பால்பண்ணை பகுதியில் உள்ள புஷ்பம் மகாலில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.

மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், பொதுச்செயலாளர்கள் கே.பி.முருகானந்தம், கருப்பு முருகானந்தம், பொன் பாலகணபதி, கார்த்திகேயினி உள்பட 150 நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிலைப்பாடு குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள், விவாதங்கள், ஆலோசனைகள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story