மின்கட்டண உயர்வு: கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்


மின்கட்டண உயர்வு: கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
x

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.

கோவை,

கோவை இடையர்பாளையம், கணபதிகுறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபாகங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல இன்னல்களை தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர். மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட தொழில்துறையினர் தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. கோவை இடையர்பாளையம், கணபதிகுறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.

மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் இன்று கருப்பு கொடியேற்றப்பட்டு போராட்டம் நடந்தது.


Next Story