படகு சவாரி, 'தீம் பார்க்' என நவீனமாகி வருகிறது... வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாதையுடன் தொங்கு பாலம் - திறப்புவிழா காண்பது எப்போது?


படகு சவாரி, தீம் பார்க் என நவீனமாகி வருகிறது... வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாதையுடன் தொங்கு பாலம் - திறப்புவிழா காண்பது எப்போது?
x

சென்னையில் வில்லிவாக்கம் ஏரி 36.5 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரி பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பசுமை சுற்றுச்சூழல் பூங்காவாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்காக ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் ரூ.8 கோடி செலவில் ஏரியின் நடுவே 250 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 100 மீட்டர் பாதை கண்ணாடியால் அமைந்துள்ளது.

இந்த பாலத்தில் நடந்து செல்லும்போது திகில் அனுபவம் ஏற்படும். கண்ணாடியின் வழியாக ஏரியின் அழகை ரசித்தவாறும் நடக்கலாம். மேலும், நடைபயிற்சிக்கு என்று பூங்காவை சுற்றி பிரத்யேக பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

பசுமையை போற்றும் விதமாக அழகிய செடி, கொடிகள், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இரவை பகலாக்கும் வகையில் வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் கண்ணை கொள்ளை கொள்ளும் வண்ணம் தொங்கு பாலம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

மேலும், தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் படகு சவாரி, ராட்டினம், நீர் விளையாட்டுகள், சாகச விளையாட்டுகள் என தனியார் பொழுதுபோக்கு பூங்காவுக்கு நிகராக 'தீம் பார்க்'கும் அமைய உள்ளது.

மெய்நிகர் திரையரங்குகள், உணவுக்கூடங்களும் இடம்பெற உள்ளன. தற்போது ஏரியின் முகப்பு பகுதியில் அழகிய வடிவில் செயற்கை நீருற்று அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பாடி மேம்பாலம் வழியாக செல்வோர்களின் கண்களையும், கவனத்தையும் இந்த தொங்கு நடைபாலம் ஈர்த்து வருகிறது. எனவே பணி நடைபெறும் இடத்துக்கு தினமும் மக்கள் வருகிறார்கள். பூங்கா பணி எப்போது நிறைவடையும் என்று கேட்டுச்செல்கிறார்கள்.

இதுகுறித்து பலதரப்பட்டோரின் கருத்துகள் வருமாறு:-



வில்லிவாக்கம் சிட்கோ நகர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் எம்.கே.கிருஷ்ணமூர்த்தி:-நான் 1982-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் வசித்து வருகிறேன். ஆரம்பத்தில் வில்லிவாக்கம் ஏரி குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு மாசடைந்து காணப்பட்டது. கொசுக்கள் உற்பத்தியாகும் பண்ணையாகவும், நோய்கள் பரப்பும் கூடாரமாகவும் இருந்தது.

அசுத்தமாக காணப்பட்ட இந்த ஏரி இன்றைக்கு வில்லிவாக்கத்தின் அடையாளமாகவும், சிறுவர்கள் முதல் முதியோர்கள் என அனைவரையும் ஈர்க்கும் வகையில் சிறந்த சுற்றுலா தலமாகவும் மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வரும் போது நடைபயிற்சி செய்பவர்களுக்கு மாதக்கட்டணம் குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் சங்கம் சார்பில் முன்வைக்கிறேன்.




சமூக ஆர்வலர் வில்லிவாக்கம் சுரேஷ்:- தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் ஒரு தொகுதி என்பதுதான் வில்லிவாக்கத்துக்கு அடையாளம். தற்போது வில்லிவாக்கம் ஏரி புத்துயிர் பெற்று உலகத்தரத்துக்கு நிகரான சுற்றுலாதலமாக மாறி வருவதால் வில்லிவாக்கத்தின் அடையாளம் இனி இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில் பிரதிபலிக்கும். இது எங்கள் பகுதிக்கு கிடைக்கும் பெருமை, அங்கீகாரம் ஆகும்.

எங்கள் பகுதியில் ஒரு பொழுதுபோக்கு இடம் இல்லையே என்ற மக்களின் நீண்ட கால ஏக்கமும் விரைவில் தணிய உள்ளது. மக்களின் ஆவல், எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டு பூங்கா பணியை விரைவுப்படுத்திட வேண்டும். கோடை விடுமுறைக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பூங்காவுக்கு 'டாக்டர் கலைஞர் கருணாநிதி' என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்.



கல்லூரி மாணவர் குருசரண்:- நான் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.டெக் படித்து வருகிறேன். என்னுடைய உறவினர் வீடு வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது. எனவே நான் அவ்வப்போது உறவினர் வீட்டுக்கு வந்து செல்வேன்.

தற்போது வில்லிவாக்கம் ஏரியில் சிங்கப்பூர் நாட்டில் உள்ளது போன்று தொங்கு பாலம் கண்ணாடிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது குறித்து வெளியாகும் செய்திகள், படங்களை பார்க்கும் போது பிரமிப்பாகவும், வியப்பாகவும் இருக்கிறது. எப்போது இந்த ஏரி பூங்கா திறக்கப்படும், தொங்கு பாலம், கண்ணாடி பாதையில் நடந்து செல்லலாம் என்ற ஆசை அதிகரித்து வருகிறது.



கல்லூரி மாணவி அபிதாஸ்ரீ:- வில்லிவாக்கம் ஏரி சுற்றுச்சூழல் பூங்காவுடன் படகு சவாரி, 'தீம்' பார்க் என பொழுதுபோக்கு சுற்றுலாதலமாக மாறப்போவது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரபல சுற்றுலாதல இடங்கள் வரிசையில் இந்த ஏரி பூங்காவும் இடம்பெறும். இந்த பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு கண்களுக்கு விருந்தாக அமையும்.

படகு சவாரி, தீம் பார்க்கும் வர இருப்பதால் சிறந்த பொழுதுபோக்கு தலமாக வில்லிவாக்கம் ஏரி திகழப்போகிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் 4 ஆண்டுகளாகியும் பணிகள் முடிவடையாமல் இருப்பது மனக்குறையாக உள்ளது.

எனவே இப்பணியில் கூடுதல் பணியாளர்களை அமர்த்தி பணிகளை வேகப்படுத்த வேண்டும். கோடைகாலத்துக்குள் இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பாழடைந்த வில்லிவாக்கம் ஏரி கடந்த 2016-ம் ஆண்டு மீட்டெடுக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. பின்னர் சேத்துப்பட்டு ஏரி போன்று இந்த ஏரியையும் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. வருகிற கோடைக்காலத்துக்குள் இந்த பூங்கா திறக்கப்படுமா? என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து இந்த பூங்காவின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டேவிட்டிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

வில்லிவாக்கம் ஏரி பூங்காவை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று நினைத்துதான் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் பணிகள் வேகம் எடுத்து நடைபெற்று வருகின்றன.

மக்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பு, ஆவலை உணர்ந்து வருகிற கோடை காலத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் சில காரணங்களால் பணிகள் முடிவடைய இன்னும் 8 மாதங்கள் தேவைப்படும்.

வில்லிவாக்கம் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம் சிங்கப்பூரை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் உறுதித்தன்மை குறித்து சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஒரே சமயத்தில் எத்தனை பேர் இந்த பாலத்தில் செல்லலாம் என்பது பற்றி அவர்கள் அறிக்கை அளிப்பார்கள். இந்த பாலத்தை வடிவமைத்து கொடுத்த சிங்கப்பூர் நிறுவன அதிகாரிகள், ஒரே சமயத்தில் 50 பேர் செல்லலாம் என்று சான்று கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினர்.


Next Story