மும்பை விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு - சென்னை விமான நிலையத்தில் சோதனை தீவிரம்


மும்பை விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு - சென்னை விமான நிலையத்தில் சோதனை தீவிரம்
x

மும்பை செல்லும் விமானத்தில் நடுவானில் வெடிகுண்டு வெடிக்கும் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு 'ஆகாஷா ஏர்லைன்ஸ்' என்ற விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கோவா, வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு 'ஆகாஷா ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மும்பை செல்லும் விமானத்தில் நடுவானில் வெடிகுண்டு வெடிக்கும் என சமூக வலைதளத்தில் ஒரு நபர் 'ஆகாஷா ஏர்லைன்ஸ்' நிறுவனத்தை டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக அந்த விமான நிறுவனத்தின் அனைத்து விமானங்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு மும்பையைச் சேர்ந்த 'ஆகாஷா ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் விமானம் ஒன்று மும்பை புறப்பட்டுச் செல்கிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதே போல் மும்பை, பெங்களூரு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த மிரட்டல் பதிவை வெளியிட்ட நபர் யார் என்பதை கண்டறியும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.



Next Story