2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் மத்திய பா.ஜ.க. அரசை தூக்கி எறிய வேண்டும் - கனிமொழி எம்.பி


2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் மத்திய பா.ஜ.க. அரசை தூக்கி எறிய வேண்டும் - கனிமொழி எம்.பி
x

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் மூலம் மத்திய பா.ஜ.க. அரசை தூக்கி எறிய வேண்டும் என்று தாராபுரத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கனிமொழி எம்.பி. பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தாராபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தி.மு.க. மாநில மகளிரணி துணை செயலாளரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான என்.கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கனிமொழி எம்.பி.

விழாவில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டுக்கு கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும். நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி மக்களோடு மக்களாகவும், மக்கள் மனதில் கலந்து வாழ்ந்து கொண்டுள்ளார்.

கருணாநிதி ஆட்சியின் போது அவர் கொண்டு வந்த திட்டம் நம்மோடு மட்டும் நிற்காமல் பல தலைமுறைக்கு நிலைத்து நிற்க வேண்டும் என கூறினார். தமிழ்நாட்டில் பெண்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக குடும்பத்தில் உள்ள சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சம பங்கு உண்டு என்ற திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அண்ணா மற்றும் பெரியார் கண்ட கனவுகளை நிறைவேற்றினார்.

பா.ஜ.க.வை தூக்கி எறிய வேண்டும்

தற்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்துக்கு ஆளுனராக நியமித்த காலத்திலிருந்து தி.மு.க.வுக்கும், தி.மு.க. ஆட்சி மீதும் பல்வேறு குற்றம் சாட்டி வருவது வாடிக்கையாக உள்ளது. ஒரு அமைச்சர் அமைச்சரவையில் இருக்க வேண்டுமா? கூடாதா? என்பதை பற்றி முடிவு செய்ய வேண்டியது முதல்-அமைச்சரே தவிர கவர்னர் அல்ல. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை பதவியிலிருந்து தூக்கி எறிய வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடம் கற்பிக்க வேண்டும். இதன் மூலம் தி.மு.க. நிலைத்து நிற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.12½ லட்சம்

விழாவில் 16 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், 15 பேருக்கு இஸ்திரி பெட்டி, 100 குடும்பத்திற்கு 19 வகையான ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள், 100 பேர்களுக்கு தென்னங்கன்று மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆட்டோ உள்பட 332 பயனாளிகளுக்கு ரூ.12.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.


Next Story