பஸ், ரெயிலில் கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது


பஸ், ரெயிலில் கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
x

ரெயில் மற்றும் பஸ்சில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திக்கு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் திருத்தணி ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த காச்சிகுடா விரைவு ரெயில், திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் ரெயில் ஆகியவை திருத்தணி ரெயில் நிலைய நடைமேடையை வந்தடைந்தது.

அதில், போலீசார் ஏறி சோதனையிட்டபோது காச்சிகுடா ரெயிலில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 29) என்பவர் வைத்திருந்த பையில் 16 கிலோ கஞ்சாவும், புதுச்சேரி ரெயிலில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் (40) என்பவர் வைத்திருந்த பையில் 14 கிலோ கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் திருத்தணி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்து பஸ்சில் சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (56) என்பவர் 6 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story