ஆவடி அருகே மொபட் மீது மோதிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது - 4 பேர் காயம்


ஆவடி அருகே மொபட் மீது மோதிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது - 4 பேர் காயம்
x

ஆவடி அருகே மொபட் மீது மோதிய விபத்தில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவள்ளூர்

ஆவடியை அடுத்த சேக்காடு வரதாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லி (வயது 52). இவர், திருமழிசை பகுதியை சேர்ந்த பாபு (45) என்பவருடன் நேற்று மாலை மொபட்டில் திருமுல்லைவாயலில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆவடி அருகே சி.டி.எச். சாலையில் தனியார் கம்பெனி எதிரே வரும்போது இவர்களுக்கு பின்னால் சென்னை கொடுங்கையூர் விவேகானந்தா நகரை சேர்ந்த செல்வம் (56) மற்றும் சந்தோஷ் (16) ஆகியோர் காரில் வந்தனர். காரை ஓட்டி வந்த செல்வம், முன்னால் சென்ற மொபட்டை முந்திச்செல்ல முயன்றார்.

அப்போது மொபட்டில் மோதிய கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மொபட்டில் வந்த நல்லி, பாபு இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். காரில் வந்த 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

அங்கிருந்த பொதுமக்கள் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வத்துக்கு வலது கையில் 4 தையலும், சந்தோசுக்கு இடது கையில் 3 தையலும் போடப்பட்டது. இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story