மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த அக்காள்-தம்பி பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த அக்காள்-தம்பி பலி
x

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அக்காள் மற்றும் தம்பி பலியானார்கள்.

சென்னை

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகள் கலைச்செல்வி (வயது 26), மகன் சந்தோஷ் குமார் (21). அக்காள், தம்பியான இவர்கள் இருவரும் ஒரே தனியார் டெலிகாம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

கலைச்செல்விக்கு திருமணமாகி விட்டது. அவர், தாம்பரத்தை அடுத்த சந்தோஷபுரம், விக்னராஜபுரம் 5-வது மெயின் ரோட்டில் கணவர் சுரேந்தராவுடன் வசித்து வந்தார்.

நேற்று காலை அக்காள், தம்பி இருவரும் சைதாப்பேட்டையில் வசிக்கும் தங்கள் பெரியப்பாவும், சென்னை ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருமான குமரவேலை பார்க்க சென்றனர். இதற்காக சந்தோஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் சந்தோஷபுரத்தில் உள்ள அக்காள் கலைச்செல்வியை அழைத்து சென்றார்.

மேடவாக்கம்-வேளச்சேரி மெயின் சாலை வழியாக சைதாப்பேட்டை நோக்கி சென்றனர். மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி பாலத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கலைச்செல்வி சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே உள்ள சாலையில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அவரை ஆட்டோவில் ஏற்றி சென்று பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலைச்செல்வி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்தோஷ்குமார் பலத்த காயத்துடன் மேம்பாலத்திலேயே மயங்கி கிடந்தார். அவரையும் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமாரும் உயிரிழந்தார். விபத்தில் அடுத்தடுத்து அக்காள், தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து தாம்பரம் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் அனில் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான மறைமலை நகர் திருநாவுக்கரசு தெருவை சேர்ந்த ஆலம் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story