சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிகார் அரசைத் தொடர்ந்து ஒடிசா மாநில அரசும், கர்நாடக அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றன. ஒடிசாவில் மே 1 முதல் ஜூலை 10 வரை நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அம்மாநில அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதை விரைவில் வெளியிட இருப்பதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையிலான புதிய அறிக்கையை கர்நாடக அரசிடம் நீதிபதி ஜெயப்பிரகாஷ் ஹெக்டே தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அடுத்த மாதத்துக்குள்ளாக தாக்கல் செய்யும்; அதன்பின் அதன் விவரங்களும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகநீதியைக் காப்பதற்கான ஒடிசா மற்றும் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.
சமூகநீதியின் தொட்டில் தமிழகம்தான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். சமூகநீதி வழங்குவதற்கான பல முன்முயற்சிகள் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியுள்ளன. அதேபோல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல் என்ற சமூகநீதித் தென்றலும் தென் எல்லையான தமிழகத்திலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்படி கடந்த 44 ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் போதிலும், அதை செய்ய சமூகநீதியின் தொட்டிலான தமிழகத்தை ஆண்ட, ஆளும் அரசுகள் முன்வரவில்லை.
பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை ஒட்டுமொத்த இந்தியாவும் வரவேற்கும் நிலையில், அதுகுறித்து தமிழகத்தை ஆளும் திமுக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
சமூகநீதி சார்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கும் மாநிலம் தமிழகம்தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்ற 2010-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பழைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை? என்று சுப்ரீம் கோர்ட்டு வினா எழுப்பினால் அதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவாவது தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்குள்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒடுக்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் ஆகும்.
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல. தமிழக அரசுக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஒரு மாதத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய தடையாக இருப்பது எது என்பது தெரியவில்லை. சமூகநீதிக்கு எதிரான தடைகள் எவையாக இருந்தாலும் அவற்றை உடைத்து தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்கான ஆணையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பிறப்பிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.