அதிமுக கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு


அதிமுக கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு
x

சி.வி.சண்முகம் அளித்த புகாரில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்றது. அந்த சமயத்தில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 முன்னாள் எம்எல்ஏக்கள், 2 காவலர்கள் உட்பட 45 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராய்பேட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அளித்த புகாரின் படி மோதலில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் என மொத்தம் 400 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த மோதலால் தென் சென்னை வருவாய் கோட்டாச்சியர் முன்னிலையில் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைத்து மூடப்பட்டது. இந்த மோதல் சம்பவம் தொடர்பாக எடப்பாடி ஆதரவாளர் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் என தனித்தனியாக மொத்தம் 3 வழக்குகள் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் படி ராயப்பேட்டை போலீசார் திருட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் என மொத்தம் 65 பேர் ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அதேநேரம் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், இந்த வழக்கு தமிழக அரசு உத்தரவுப்படி மாநகர காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து சிபிசிஐடி டிஜிபி சகீல் அக்தர், அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக கலவர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகார் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யும் பணியை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி மற்றும் வீடியோ ஆதாரங்கள் ஆகியவை அடங்கிய பென் டிரைவ் மற்றும் வழக்கு சம்மந்தமான ஆவணங்களை சென்னை போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதிமுக கலவரம் தொடர்பான 4 வழக்குகளில், 2 வழக்குகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story