சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழா: அயலக தமிழர்களுக்கு புதிய நல திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழா: அயலக தமிழர்களுக்கு புதிய நல திட்டங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
x

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர்களுக்கான புதிய நல திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அயல்நாடுகளில் தமிழ்ச்சங்கங்களை ஒருங்கிணைக்கவும், அயலகத்தில் உள்ள சாதனைத் தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ந்தேதி அயலகத் தமிழர் தினமாக கொண்டாடப்படும் என்ற அறிவித்தார்.

அதன்படி தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் இந்த ஆண்டின் அயலகத் தமிழர் தின விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) கலந்து கொள்கிறார். அப்போது அவர், அயலக தமிழர்களுக்கான புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

நேற்று அயலக தமிழர் தின விழாவை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தொடங்கி வைத்தார். மேலும் கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்ட புத்தக கண்காட்சி அரங்குகளையும் திறந்து வைத்தார்.

தொடக்க விழாவில் உலகெங்கும் தமிழர் இடம் பெயர்வு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள், அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், தொழிற்துறையில் அயலகத் தமிழர்களின் பங்களிப்பு, தமிழ்நாட்டில் முதலீடுகள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், அயல்நாடுகளில் தமிழர்களின் தொழில் முன்னெடுப்புகள், அயலகத் தமிழ் மாணவர்கள் தமிழ்நாட்டில் கல்வி கற்க உள்ள வாய்ப்புகள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் பரிமாற்றம் போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றது.

50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழச்சங்கத்லைவர்கள், 500-க்கும் அதிகமான அயல்நாட்டு பிரதிநிதிகள் மற்றும் அயல் மாநில தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தமிழ் பாரம்பரிய கலாசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, தென்னரசு மனோ தங்கராஜ், தி.மு.க. எம்.பி.க்கள் திருச்சி சிவா, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கப் பாண்டியன், டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, டாக்டர் கலாநிதி வீராசாமி, என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், அரசு செயலாளர் கிருஷ்ணன், ஜெசிந்தா லாசரஸ் உள்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story