பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்: நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டி இல்லை


பா.ஜ.க வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்: நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் போட்டி இல்லை
x
தினத்தந்தி 21 March 2024 1:34 PM GMT (Updated: 21 March 2024 2:07 PM GMT)

தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொகுதி மாற்றப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக பா.ஜ.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இதில் இடம் பெற்று இருந்தது. தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஐ.ஜே.கே மற்றும் புதிய நீதிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்துத்தான் மொத்தம் 9 தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

பா.ஜ.க.வேட்பாளர்கள் மட்டும் என பார்த்தால் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. கோவை தொகுதியில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் அடங்கும். அந்த வகையில், தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி தொகுதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டது பா.ஜ.க.வினருக்கே வியப்பை கொடுத்தது. ஆனால், சிறிது நேரத்தில் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு புதிய பட்டியல் வெளியானது. இதில், நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. தி.மு.க கூட்டணியில் நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.கவில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுகிறார்.


Next Story