சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு - பயணிகள் தவிப்பு


சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு - பயணிகள் தவிப்பு
x

சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை நேற்று 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

சென்னை

சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நேற்று வழக்கம்போல சென்னையில் இயங்கி கொண்டு இருந்தன. இந்தநிலையில் யாரும் எதிர்பாராதபடி கோயம்பேடு - பரங்கிமலை மார்க்கத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள் நேற்று இரவு 7.30 மணியளவில் திடீரென நிறுத்தப்பட்டன.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் நேற்று மாலை பலத்த மழை பெய்த நிலையில் விரைவாக வீடு செல்லலாம் என எண்ணி மெட்ரோ ரெயில்களில் பயணித்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதன் காரணமாக கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் வரை 5 நிமிடத்துக்கு ஒருமுறை என இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில்கள், நேற்று இரவு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் இயக்கப்பட்டது.

இதனால் பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. விரைவாக பயணிக்கத்தான் மெட்ரோவை நாடி வருகிறோம். ஆனால் மெட்ரோ ரெயில் சேவையே நிறுத்தப்பட்டால் என்ன சொல்வது? என்று நொந்து கொண்டனர். மழைக்காலங்களில் மின்சார ரெயில் நிலையங்களில் காத்திருப்பதை போல, மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர்.

இதற்கிடையில் மெட்ரோ ரெயில் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை விரைவில் சரி செய்வோம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் நேற்று இரவு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.

அதில், 'மின் கேபிளில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் ரெயில் சேவைகள் சீராகும். இதற்கிடையே விமானநிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கி, விமான நிலையத்துக்கு செல்லும் மெட்ரோ ரெயிலில் மாறி பயணிக்க வேண்டுகிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மெட்ரோ ஊழியர்களின் விரைவான நடவடிக்கை காரணமாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் இரவு 8.30 மணிக்கு மேல் கோயம்பேடு - பரங்கிமலை இடையில் வழக்கம்போல மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. எதிர்பாராத இந்த பிரச்சினை காரணமாக சென்னையில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரெயில் சேவை சீரானதை தொடர்ந்து அதுகுறித்து அறிக்கை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது.


Next Story