சென்னையை சேர்ந்த தாய், மகன், மகள் கோவையில் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கோவையில் ரெயில்முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் அருகே நேற்று தண்டவாளத்தின் அருகே 3 பேரின் உடல் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தண்டவாளத்தின் அருகே கிடந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த 3 பேரும் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அப்போது 3 பேரின் உடல் கிடந்த இடத்தின் அருகே ஒரு பை கிடந்தது. அந்த பையை கைப்பற்றி, உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வரலட்சுமி (வயது 45), அவருடைய மகன் யுவராஜ்(16), மகள் ஜனனி(15) என்பது தெரியவந்தது.
கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட 3 பேரும் நேற்று காலை போத்தனூர் ரெயில் நிலையம் வந்துள்ளனர். அவர்கள் 3 பேரும் ரெயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக நடந்து சென்று, வெங்கிட்டாபுரம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் என 3 பேரும் கோவையில் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.