போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாதீர்கள்... சென்னை மாநகராட்சி - போலீஸ்துறை இணைந்து அபராத நடவடிக்கை


போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாதீர்கள்... சென்னை மாநகராட்சி - போலீஸ்துறை இணைந்து அபராத நடவடிக்கை
x
சென்னை

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 80 இடங்களில் சுமார் 7 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு 'பார்க்கிங்' வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களை https://chennaicorporation.gov.in/gcc/pdf/ECS.pdf என்ற இணையதள இணைப்பில் பார்வையிட்டு தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த வாகன நிறுத்தும் இடங்கள் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. இங்கு ஒரு மணி நேரம் வாகனங்களை நிறுத்த காருக்கு ரூ.20-ம், மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5-ம் 'பார்க்கிங்' கட்டணமாக வசூலிக்கபடுகிறது. முக்கிய வணிக பகுதிகளான தியாகராயநகர், பாண்டி பஜார் போன்ற இடங்களில் காருக்கு ரூ.60-ம், மோட்டார் சைக்கிளுக்கு ரூ.15-ம் கட்டணம் பெறப்படுகிறது.

ஆனால் பலர் 'பார்க்கிங்' கட்டணத்தை முறையாக செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இந்த நிலையில் தியாகராயநகரில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்தும் இடத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் விஷூ மஹாஜன், தியாகராயநகர் போலீஸ் உதவி கமிஷனர் பாரதிராஜன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது முறையாக 'பார்க்கிங்' கட்டணம் செலுத்தாத வாகனங்கள் அவர்கள் முன்னிலையில் பூட்டப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகனம் நிறுத்தும் இடத்தை தவிர்த்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வாகனங்களை நிறுத்தியவர்கள் மீதும் அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநகராட்சி மற்றும் போலீஸ்துறை அதிகாரிகள் இணைந்து, இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story