மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


மேட்டூர் அணையிலிருந்து  இன்று முதல் தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x

விவசாயப் பெருமக்கள் பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை,

விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீரை இன்று (3-ந்தேதி) முதல் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும் என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீரை இன்று (3-ந்தேதி) முதல் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story