தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 5 March 2024 7:23 AM GMT (Updated: 5 March 2024 7:31 AM GMT)

தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் தி.மு.க. ஒதுக்கியுள்ளது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அதனைத்தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாக கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில், தொகுதிப் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஏற்கனவே 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்துள்ளது. காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. உடன் தொகுதிப் பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


Next Story