தென் மாவட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தினத்தந்தி 20 Dec 2023 7:03 PM GMT (Updated: 21 Dec 2023 3:19 AM GMT)

மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

மீனம்பாக்கம்,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. எனவே தொடர்ந்து மீட்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் தென் மாவட்ட மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாதிப்பு பற்றிய விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து புகைப்படங்கள் மூலம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்கமளித்தார். மேலும் இந்த ஆய்வில் 4 மாவட்ட கலெக்டர்களும் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.

இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தூத்துக்குடி செல்கிறார். முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று இரவு புறப்பட்டு செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை 10.15 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார். காலை 11.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறார்.

பின்னர் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்கிறார். ஆய்வை முடித்து கொண்டு இரவு 9.25 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.


Next Story