ராணிப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு ..!


ராணிப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு ..!
x
தினத்தந்தி 30 Jun 2022 5:40 AM GMT (Updated: 30 Jun 2022 6:35 AM GMT)

ராணிப்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வருகை தந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு ராணிப்பேட்டை வருகை தந்தார். அங்கு பாரதிநகரில் உள்ள ஜி.கே.ரெசிடென்சியில்‌ தங்கினார்.

இன்று காலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.118.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார். அங்குள்ள அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

மாணவர்களிடம் படிப்பதற்குரிய சூழ்நிலைகள், தேவைகள் குறித்து கலந்துரையாடினார். ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும் போதும் முதல் அமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொள்ளுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் ராணிப்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு வகுப்பறையில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அங்குள்ள தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story