அனகாபுத்தூரில் தீயில் கருகி 7-ம் வகுப்பு மாணவி சாவு - கரையானை அழிக்க முயன்றபோது பரிதாபம்


அனகாபுத்தூரில் தீயில் கருகி 7-ம் வகுப்பு மாணவி சாவு - கரையானை அழிக்க முயன்றபோது பரிதாபம்
x

கரையானை அழிக்க வைத்த தீயில் கருகி 7-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அனகாபுத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர் உசேன்பாட்ஷா (வயது 42). இவருடைய மனைவி ஆயிஷா (35). இவர்களுடைய மகள் பாத்திமா(13). இவர், அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

உசேன்பாட்ஷா தனது மனைவி, மகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். அடிக்கடி வீட்டில் கரையான் அரிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 31-ந்தேதி உசேன்பாட்ஷா, பெயிண்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்து கரையான்கள் மீது காட்டி அழிக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் நின்றிருந்த அவரது மகள் பாத்திமா மீது தீப்பிடித்து எரிந்தது. உடல் முழுவதும் தீ பரவியதால் அவர் வலியால் அலறி துடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உசேன்பாட்ஷா, அவரது மனைவி ஆயிஷா இருவரும் மகள் உடலில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். அப்போது அவர்கள் மீதும் தீப்பிடித்து எரிந்தது.

பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் உசேன்பாட்ஷா மற்றும் ஆயிஷா இருவரும் லேசான தீக்காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆனால் 60 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையத்தில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பாத்திமா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கரையானை அழிக்க வைத்த தீயில் உடல் கருகி பள்ளி மாணவி பலியான சம்பவம் அனகாபுத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story