கோவை சம்பவம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி


கோவை சம்பவம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
x

கோவை கார் வெடி விபத்தால் முதல்-அமைச்சர் எப்போது தனது மவுனத்தை கலைப்பார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை,

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் தீபாவளி திருநாளை உறவுகள், நட்போடு சேவை மனப்பான்மையுடன் எல்லோருக்கும் கொடுத்து மன மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. ஜனாதிபதியை தொடர்ந்து பிரதமர் மோடி கார்கில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து கூறினர். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆகியோர் வாழ்த்து கூறினர்.

மொழிக்கடந்து மாநிலம், நாடு கடந்து பண்பாட்டுடன் பாரம்பரியமாக கொண்டாடப்படுவது தீபாவளி திருநாள் ஆகும். தீமைகளை அகற்றி நன்மைகளை பரவ வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. தி.மு.க. தலைவராக இருந்திருந்தால் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்ல மனம் மறுப்பது ஏன்?

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவ இடத்தை, நேரில் ஆய்வு செய்த காவல்துறை இயக்குநர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும். கோவை கார் வெடி விபத்தால் மக்களிடம் நிலவும் அச்சத்தை போக்க முதலமைச்சர் எப்போது தனது மவுனத்தை கலைப்பார்.

தீபாவளிக்கு 3 நாட்களில் மது விற்பனை ரூ.708 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?. எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மதுக்காக போராடிய முதலமைச்சர் இப்போது மது விற்பனைக்கு என்ன சொல்ல போகிறார்?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story