பசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க கலெக்டர் வேண்டுகோள்


பசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க கலெக்டர் வேண்டுகோள்
x

மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க வேண்டும் என கலெக்டர் கற்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூர்

பசுமை குழு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பசுமை குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மரக்கன்றுகளை நடுவதற்கு பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள், புறம்போக்கு நிலங்கள், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் என நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறையும் குறைந்தபட்சம் 10 ஹெக்டேர் நிலத்தை தேர்வு செய்து மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்ய வேண்டும். மேலும் ஒரு மரம் அகற்றப்பட்டால் 10 மரக்கன்றுகளை நட்டு, அது நன்கு வளரும் வரை பராமரிக்க வேண்டும்

அபராதம்

இதனை செய்ய தவறும் பட்சத்தில் அவர்களுக்கு மரத்தின் மதிப்பை போன்று 3 மடங்கு அபராத தொகை விதிக்க வேண்டும். மேலும், காலநிலை மாற்றம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்க குழந்தைகளிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சுய உதவி குழுவினர், பள்ளிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அவ்வாறு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

முழு பங்களிப்பு

பொதுமக்களும், தன்னார்வலர்களும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதற்கு தங்களின் முழு பங்களிப்பை அளிக்க வேண்டும். மரங்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி பசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் முழு பங்களிப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ், வனச்சரகர் பழனிக்குமரன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story