ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் - போலீஸ் விசாரணையில் தகவல்


ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் - போலீஸ் விசாரணையில் தகவல்
x

அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக நியமித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி 10-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று உள்ளே நுழைய முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதே சமயம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த இசை நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம், அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக நியமித்ததும், இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி ஏற்கனவே கடந்த மாதம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, பின்னர் செப்டம்பர் 10-ந்தேதி நடத்தப்பட்டுள்ளது. கடந்த முறை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட போது 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக புதிய டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் டிக்கெட் ரத்தானவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 10-ந்தேதி நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்ததாகவும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதை விட அதிகமான நபர்கள் நிகழ்ச்சிக்கு வந்ததால் குளறுபடி ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விளக்கங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தாம்பரம் காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.




Next Story