பேரூராட்சி தலைவரின் கணவர், துணைத்தலைவரிடையே மோதல் - 8 பேர் மீது வழக்கு


பேரூராட்சி தலைவரின் கணவர், துணைத்தலைவரிடையே மோதல் - 8 பேர் மீது வழக்கு
x

பேரூராட்சி தலைவரின் கணவர், துணைத்தலைவரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரும், துணைத்தலைவராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த சுகுமார் என்பவரும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில், தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் இடையே டெண்டர் விடுவதில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் மாலை ஆரணி பேரூராட்சியில் ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது துணைத்தலைவருக்கும், பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரியின் கணவர் நவீன்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் துணைத்தலைவர் சுகுமார் தனது ஆதரவாளர்களுடன், நவீன்குமார் தனது ஆதரவாளர்களுடனும் பேரூராட்சி அலுவலகம் எதிரே நடுரோட்டில் ஒருவரை, ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டார்கள். இதனை தடுக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு அடி விழுந்தது. இதுகுறித்து துணைத்தலைவர் சுகுமார், நவீன்குமார் (40), ரவி, தினேஷ், வெங்கடேசன் என 4 பேர் மீது புகார் செய்தார்.

இதேபோல் நவீன்குமார், துணைத்தலைவர் சுகுமார் (43) மற்றும் 3 பேர் தாக்கியதாக ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

எனவே, ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story