கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்
x
தினத்தந்தி 22 Sept 2023 3:25 PM IST (Updated: 22 Sept 2023 3:49 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் அனைவருக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னை,

மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் அனைவருக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதல் அமைச்சரின் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;

"தங்களது அன்பு கட்டளையால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக தொண்டாற்றும் வாய்ப்பை பெற்ற உங்களின் அன்பு உடன்பிறப்பு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்கு எழுதும் கடிதம்.

பேருந்தில் மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலக் கல்லூரிக்கு வரும் புதுமைப் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, நகைக்கடன் ரத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கம் என மகளிருக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவது திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் அறிவீர்கள். மகளிர் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை இத் திட்டங்கள் உருவாக்கி உள்ளன.

இந்த வரிசையில் மற்றுமொரு மாபெரும் திட்டம் தான் தேர்தலுக்கு முன்னதாக நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் மிகமிக முக்கியமான மகளிர் உரிமைத்திட்டம். இந்த திட்டத்தின் பயனாளியாகத் தகுதியின் அடிப்படையில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக்கணக்கில் தமிழ்நாடு அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும். பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் அவரது தாய், சகோதரி, மனைவி, மகள் எனப் பெண்களின் பல மணிநேர உழைப்பு இருக்கிறது. இப்படி கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும்.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, உள்ளாட்சி அமைப்புகளிலும் பணியிடங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கிய மகளிர் முன்னேற்ற மாண்பாளர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் இந்த திட்டம் தொடங்கப்படுவதால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை." இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story