அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14-வது முறையாக நீட்டிப்பு


அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14-வது முறையாக நீட்டிப்பு
x

செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி 3-வது முறையாக தாக்கல் செய்த மனு வரும் 8 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு இதுவரை 13 முறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து கானொலி வாயிலாக செந்தில் பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 11 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி 3-வது முறையாக தாக்கல் செய்த மனு வரும் திங்கள் கிழமை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கெனவே 2 முறை செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அதேநேரம் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து கடந்த 203 நாட்களாக சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story