தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தினால் பேரிடர் மூலம் மனித குலத்திற்கு இயற்கை ஆபத்தை ஏற்படுத்தும் - ஐகோர்ட்டு எச்சரிக்கை
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தங்கள் தரப்பின் விளக்கத்தை கேட்காமலேயே ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு சாலை அமைத்துள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை மறுத்து அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நிலம் தங்களுக்கு சொந்தமானது என்பதை மனுதாரர்களால் நிரூபிக்க முடியவில்லை. பொது மக்கள் மட்டுமல்ல நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசே ஈடுபட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தமனுவை தள்ளுபடி செய்கிறோம். குடிநீர் ஆதாரமாக மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க தவறுவதால் தான், ஒருபக்கம் வறட்சியும், மறுபக்கம் வெள்ளத்தையும் எதிர்கொள்கிறோம்.
நீர்நிலையை பாதுகாப்பது அரசின் கடமை. அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை. இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மை பாதுகாக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறியதால் தான் புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
காடுகள், நீர்நிலைகளை பாதுகாப்பது மனிதர்களின் கடமை. இயற்கைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தினால் சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்களாக இயற்கை மனித குலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.