கடலூர்: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் - சீமான்
ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
கடலூர் அருகே அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.
இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். சத்தம்கேட்டு திரண்ட கிராம மக்கள், உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை ரூ.25 இலட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள் கெடிலம் நதிக்கரையில் குளிப்பதற்காகச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
கெடிலம் நதியில் மூழ்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாயை துயர்துடைப்பு நிதியாக அதிகரித்து வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
மலை, ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் அன்பிற்கினிய உறவுகள் மிகக் கவனத்துடனும், பாதுகாப்புடனும் சென்று வரவேண்டுமெனவும், குறிப்பாக தங்களுடன் வரும் குழந்தைகளின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டுமெனவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.