கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடலூர் மாவட்டம், எம். புதூர் பகுதியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம், எம். புதூர் பகுதியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வந்துள்ள செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எனது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்கள் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய நிவாரண உதவியை வழங்கவும், அடிக்கடி நடைபெறும் பட்டாசு விபத்தினைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.