தனியார் நிறுவனத்துடன் இணைந்து லஞ்சம் வாங்கியதாக புகார் - கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் அதிரடி கைது


தனியார் நிறுவனத்துடன் இணைந்து லஞ்சம் வாங்கியதாக புகார் - கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் அதிரடி கைது
x

லஞ்சம் வாங்கியதாக புகாரில் கடலூர் மாநகராட்சி மேயரின் உதவியாளர் உள்பட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர்,

கடலூரில் வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கான வரைபட அனுமதி வழங்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தைப் போல் ஒரு தனி அலுவலகம் செயல்பட்டதாகவும், அங்கு மாநகராட்சி ஊழியர்கள் போல் 20-க்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டு மாநகராட்சி பணிகளை செய்து வந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், கடலூரைச் சேர்ந்த பரணி என்பவர் வீடு கட்டுவதற்காக கட்டட வரைபட அனுமதி கேட்டு மாநகராட்சி அலுவலகத்தை அணுகிய போது, மாநாகராட்சி அலுவலக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தியதாகவும், அந்த தனியார் நிறுவனத்தில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் பரணி புகார் அளித்தார். இதையடுத்து பரணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பியுள்ளனர். இதை பரணி சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் சென்று கொடுத்த போது, அந்த பணத்தை வாங்கிய தனியார் நிறுவனத்தின் நிர்வாகி ஆறுமுகம் மற்றும் கடலூர் மாநகராட்சி மேயரின் நேரடி உதவியாளர் ரகோத்தமன் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்குப் பிறகு, லஞ்சமாக வாங்கப்பட்ட பணம் யார் யாருக்காக வாங்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Next Story