பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைதுணி கட்டி ஆர்ப்பாட்டம்


பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைதுணி கட்டி ஆர்ப்பாட்டம்
x

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக இருந்த பேரறிவாளன் இந்திய அரசியலமைப்பு சட்டம் 142 வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதனை கண்டித்து நேற்று திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தை அருகே காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நகர தலைவரும், திருவள்ளூர் நகர மன்ற உறுப்பினருமான வக்கீல் வி.இ.ஜான் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தன், சி.பி. மோகன்தாஸ், அருள்மொழி, வடிவேலு, தளபதிமூர்த்தி, சரஸ்வதி, டி.எஸ்.இளங்கோவன், வி.எஸ்.ரகுராமன், இ.கே .ரமேஷ், பழனி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு அறவழி போராட்டம் நடை பெற்றது. இதற்கு வட்டார தலைவர் மதன் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சிவா ரெட்டி, நகர தலைவர் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஸ் நிலையத்தில் நாற்காலியில் அமர்ந்தவாறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்களது வாயை வெள்ளை துணியால் கட்டிக்கொண்டு அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி பஸ் நிலையம் முன்பு ராஜீவ்காந்தி சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்ணில் கருப்பு துணியை கட்டி கொண்டு அமர்ந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்தும், ராஜீவ் காந்தியை வாழ்த்தியும் முழக்கங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அருள்அன்பரசு உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

பொன்னேரி அண்ணா சிலை அருகே நடந்த அறவழி போராட்டத்தில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சதா சிவலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர் . அதை தொடர்ந்து அமைதி போராட்டம் நடை பெற்றது. இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொதுசெயலாளர் கோவர்த்தனன், மாவட்ட செயலாளர் தயாளன், பொன்னேரி நகர காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே .பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார்குப்பம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் துணியை கட்டியபடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாநில நெசவாளர் அணி தலைவர் சுந்தரவேல் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருத்தணியில் உள்ள ராஜீவ்காந்தி சிலை முன்பு பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து திருத்தணி காங்கிரஸ்கட்சி நகர தலைவர் பார்த்திபன், மாநில செயலார் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் அன்பு ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வாயில் வெள்ளை துணி கட்டி தங்களது எதிர்ப்பை அறவழியில் தெரிவித்தனர்.


Next Story