திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர்.
தூத்துக்குடி,
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடற்கரைக் கோவில் என்பதால் பக்தர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசித்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு கிறிஸ்தும்ஸ், புத்தாண்டு விடுமுறைகளும் விடப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள், நேர்த்திக்கடனை செல்லுத்துவதற்காக வருகை தரும் பக்தர்கள் என பலரும் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடற்கரை முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்று அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன.