அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி


அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
x

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில்பாலாஜி. அப்போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்து, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக பதவி ஏற்றார். இந்தநிலையில், அவர் மீதான பழைய வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை கடந்த ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோட்டு உத்தரவின்படி, கடந்த 7-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இதன்படி கடந்த 7-ந்தேதி இரவு முதல் 12 (சனிக்கிழமை) ஆம் தேதி மதியம் வரை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து, சனிக்கிழமை மதியம் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

இந்த வழக்கை தன் சேம்பரில் வைத்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார். பின்னர் வருகிற 25-ந்தேதி வரை செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக தாக்கல் செய்தனர். பின்னர், செந்தில்பாலாஜியை அதிகாரிகள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக இதுவரை தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறை தர வேண்டும் என முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பு முறையிட்டுள்ளது. குற்றப்பத்திரிகை, கைது மெமோ உள்ளிட்ட ஆவணங்களை வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை கேட்டு மனுவை வலியுறுத்தவில்லை எனவும் , காலையில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும்படி வலியுறுத்தவில்லை எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் கோர்ட்டில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.


Next Story