குப்பைகளை கொட்டுவதில் தகராறு; தொழிலாளிக்கு கத்திக்குத்து


குப்பைகளை கொட்டுவதில் தகராறு; தொழிலாளிக்கு கத்திக்குத்து
x

தோகைமலை அருகே குப்பைகளை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து, தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கரூர்

தகராறு

தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கானா புதூர் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் லோகேஸ்வரன் (வயது 25), கூலி தொழிலாளி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்த் என்பவருக்கும் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் லோகேஸ்வரன் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஆனந்த் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த பெரியசாமி, லோகேஷ் ஆகியோர் குப்பைகளை கொட்டியது தொடர்பாக தகராறில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் லோகேஸ்வரனை குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

3 பேர் மீது வழக்கு

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லோகேஸ்வரனின் தாயார் ரெங்கம்மாள், மனைவி ஜெயபிரியா ஆகியோர் அவர்களை தடுத்துள்ளனர். இதையடுத்து ஆனந்த் தரப்பினர் அவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லோகேஸ்வரனின் தோள்பட்டையில் குத்தினார். பின்னர் லோகேஸ்வரன் வீட்டின் கதவை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர்.

இதையடுத்து படுகாயம் அடைந்த லோகேஸ்வரன், ரெங்கம்மாள், ஜெயபிரியாவை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து லோகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை இ்ன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்த், பெரியசாமி, லோகேஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story