திருச்சியில் களைகட்டியுள்ள தீபாவளி விற்பனை - புத்தாடை, பட்டாசு கடைகளில் குவியும் கூட்டம்
திருச்சியில் இன்று காலை முதல் மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி விற்பனை களைகட்டி வருகிறது.
திருச்சி,
தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பண்டிகையை கொண்டாட மக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில் திருச்சியில் இன்று காலை முதல் பரவலான மழை பெய்து வந்த நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதற்காக கடை வீதிகளில் குவிந்து வருகின்றனர்.
திருச்சியில் உள்ள என்.எஸ்.பி. சாலை, சிங்காரத்தோப்பு, பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் புத்தாடைகள், ஆபரணங்கள், இனிப்பு, பலகார வகைகள், மளிகைப் பொருட்கள், பட்டாசு வகைகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் களைகட்டியுள்ளது.
இது மட்டுமல்லாது விழாக்கால சலுகைகள் அறிவிக்கப்பட்ட கடைகளில் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அடுத்த 2 நாட்கள் வார விடுமுறை என்பதால், விற்பனை இன்னும் அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.