ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. நிர்வாகி வெடிகுண்டு வீசி கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. நிர்வாகி வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வெடிகுண்டு வீச்சு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா டோம்னிக். இவரது கணவர் டோம்னிக் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளார். இவரது மகன் ஆல்பர்ட் (வயது 32). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகியாக இருந்தார். ஆல்பர்ட் சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் கட்டுமான பணி மற்றும் இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சுங்குவார் சத்திரம் அருகே சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே சாலை ஓரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் திடீரென ஆல்பர்ட் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.
கொலை
இதில் சுதாரித்துக்கொண்ட ஆல்பர்ட் தப்பி ஓட முயன்றார். அவரை துரத்தி சென்ற மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக தலையில் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் ஆல்பர்ட் கீழே விழுந்தார். மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆல்பர்ட்டை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு ஆல்பர்ட்டை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ஆல்பர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஆல்பர்ட்டுக்கு இந்துமதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.